“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

🕔 April 6, 2024

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக் கூத்தான விடயம் என, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்த மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நிந்தவூரில் அமைந்துள்ள – இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட காரியாயலத்துக்கு நேற்று (5) சென்று, அங்குள்ள தேவைப்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாக, சமூக ஊடகங்களில் பரப்பிவரும் செய்திகளை சுட்டிக்காட்டிப் பேசும் போதே, முன்னாள் தவிசாளர் தாஹிர் – மேற்கண்டவாறு கூறினார்.

”நிந்தவூரில் அஷ்ரப் ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபம் – கட்டி முடிக்கப்படாமல், பல தசாப்தங்களாக அரைகுறையாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டு கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக ஹக்கீம் பதவி வகித்தார். அப்போது ஹக்கீமுடைய அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி, செலவிடப்படாமல் திரும்பியது. ஆனாலும் தலைவர் அஷ்ரப் ஆரம்பித்த மண்டபத்தைக் கட்டி முடிக்க – ஹக்கீமுக்கு மனம் வரவில்லை” எனவும் தாஹிர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டில் தொடங்கிய நல்லாட்சி அரசாங்கத்திலும் மு.கா. தலைவர் ஹக்கீம் – நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போதும், நிந்தவூரில் தலைவர் அஷ்ரப் ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை கட்டி முடிக்க ஹக்கீம் உதவவில்லை என்றும் முன்னாள் தவிசாளர் தாஹிர் குற்றம் சாட்டினார்.

”விடயம் இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டத்துக்கு அவ்வப்போது சுற்றுலா வருகின்றமை போல் விஜயங்களை மேற்கொள்ளும் ஹக்கீம், அரச நிறுவனங்களுக்குள் புகுந்து – அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்ததாக செய்திகளைப் பரப்புவது, மக்களை ஏமாற்றும் அரசியல்” எனவும் குறிப்பிட்டார்.

ஆளுங்கட்சியில் பலம்மிக்க அமைச்சராக இருந்த போதெல்லாம் – நிந்தவூருக்கு எதுவும் செய்யாத ஹக்கீம், இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் வேளையில், அரச நிறுவனங்களுக்குள் புகுந்து – அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்ததாகக் கூறுகின்றமை, ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் செல்வதற்கு முயற்சித்த’ கதைக்கு ஒப்பானது என்றும் தாஹிர் விமர்சித்தார்.

”நிந்தவூரில் 20 வருடங்களாக மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கின்றார். அவர் அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவ்வாறான ஒருவர், அவரின் ஊரிலுள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரியாலயத்திலுள்ள குறைகளை ஏன் கேட்டறிந்து நிவர்த்தி செய்யவில்லை என்பதும், ஹக்கீம் வந்து ஏன் குறைகளைக் கேட்டறிந்து கொள்கிறார் என்பதும் புதிராக உள்ளது” எனவும் தாஹிர் குறிப்பிட்டார்.

அப்படியென்றால், ஹக்கீமுக்கும் மு.காங்கிரஸின் நிந்தவூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் – ஏதாவது தகராறுகள் உள்ளனவா எனவும் தாஹிர் கேள்வியெழுப்பினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்