”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை

🕔 April 30, 2024

னுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே தற்போது நாடு எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை எனவும் ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சியின் தலைவர்களே அன்றி, தானும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என கூறிய அமைச்சர், அதற்கு ஆதரவளித்த காரியத்தை மட்டுமே – தானும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் கூறினார்.

ரணிலின் தேவைக்காக தான் செயற்படவில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்காகத் தான் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்;

“இடதுசாரி அரசியல் கட்சியான சிறிமாவோ பண்டாரநாயக்க 1971இல் அரசாங்கத்தைப் பெற்ற பிறகு, மக்கள் விடுதலை முன்னணி கலவரங்கள் செய்து அன்றைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது. அன்று அவர்கள் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் சேர்ந்து கொண்டார்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டுவர உழைத்தார்கள். ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய ராணுவம் கொண்டுவரப்பட்டபோது ஜே.ஆரை எதிர்த்து அதை சுதந்திரப் பிரச்சினையாக்கி பிரேமதாசவை வெற்றிபெற உதவினார்கள். பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

பின்னர். 88/89 தேர்தல் நேரத்தில் இந்த நாட்டில் நடந்த பயங்கரம் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற சந்திரிகா குமாரதுங்கவுக்கு உழைத்தார்கள். அவர்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வகித்தனர். அதன் பின்னர் மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தார்கள். அதைச் செய்தவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது, நாட்டில் 71ஆம் ஆண்டு கிளர்ச்சி, 83 கறுப்பு ஜூலை, 88/89 பயங்கரவாதம் போன்ற காலங்களில் அரச சொத்துக்களை அழித்து மக்களைக் கொன்றனர், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தன.

அதன் பிறகு, சுனாமி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நம் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் சென்றது. கோவிட் தொற்றுநோய்களின் போது – தடுப்பூசி போடப் போகும் போது என்ன சொன்னார்கள்? ஆண்களுக்கு தடுப்பூசி போட்டால் ஆண்மை குறையும் என்றும் குழந்தை பிறக்காது என்றும் வெறும் வதந்தியைக் கதைத்தார்கள் . இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர். உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி நாடு மீண்டும் திறக்கப்பட்டபோது, சில தொழிற்சங்கங்கள் நாடு இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும், நாட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறின.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய ஒருவர் வந்து இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றோம். அப்போது, வெறும் வாய்ப் பேச்சு பேசும் அனைவரும் இதை ஏற்க அஞ்சினார்கள்.

அதற்குள், கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையையும், பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து மக்களைக் கொன்று இந்த நாட்டைக் கைப்பற்ற ஒரு குழு முயற்சித்தது. அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான் இந்த நாட்டை நான் பொறுப்பேற்பேன், மொட்டுக் கட்சியின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார்.

நான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை, நாட்டுக்கு உதவும் முடிவுகளை மட்டுமே எடுப்பேன் என்றார். அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஒன்றரை வருட காலப்பகுதியில் நாம் எடுத்த முடிவுகள் மக்கள் தீர்மானங்கள் அல்ல. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை – சிலர் விமர்சித்தாலும் எவராலும் மாற்று வழிகளை முன்வைக்க முடியாது. இதைச் செய்ய முடியாவிட்டால், இதைச் செய்ய வேண்டும் என்கிற அனுபவம் அரசியல் தலைவர்களுக்கு இல்லை.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன். அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க – அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது, நாங்கள் உதவி செய்தோம். ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தது எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் – நாங்கள் அல்ல. அவருக்கு உதவ நாங்கள் குழுவாக வழிநடத்துகிறோம்.

2022 மே மாதத்தில் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த ‘கிரீஸ்’ போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சனம் மட்டும் செய்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனி ஒருவராகவே இருந்தார். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக நான் செயற்பட மாட்டேன். இந்த நாட்டு மக்களுக்காகத் தான் நான் செயற்படுகிறேன். ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்களில் என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.

நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ – நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம். மக்கள் வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம்.

மகிந்த போரில் வெற்றி பெற்றார். இன்று மகிந்தவை ‘கிழவன்’, ‘கிழட்டு மைனா’ என்று அழைக்கிறார்கள். அடுத்ததாக, ‘இந்தப் பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது’ என்று சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் போட்டு அடிக்கிறார்கள். ‘கிழவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்கவும்’ என்று கூறுகிறார்கள். அனுபவமற்ற இளைஞர்கள் 88/89 காலப் பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

கிழவர்கள் என்று சொல்லும் போது – இந்த நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் உரித்தாகிறார்கள். புத்தாண்டு தினத்தில் கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அழிக்க முயல்கிறார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்