கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

🕔 April 30, 2024

பிச்சைக்காரர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சந்திகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் – போக்குவரத்து நெரிசல், வாகனங்களுக்கு சேதம், வீதி விபத்துக்கள் மூலம் பிச்சைக்காரர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாக போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகளிலும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும் பிச்சை எடுப்பவர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இவை என்று கூறிய அவர், வாகன சாரதிகளும் பயணிகளும் பணம் கொடுப்பதைத் தவிர்த்தால் பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வீடியோ செய்திகள் மூலம் புதிய நடவடிக்கைகள் குறித்து சாரதிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட அறிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 வரை சம்பாதிக்கும் தொழில் பிச்சைக்காரர்களுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோது, அந்த வாய்ப்பை அவர்கள் நிராகரித்ததாக தெரிவித்துள்ள அவர், பிச்சையெடுப்பதன் மூலமாக நாளொன்றுக்கு இவர்கள் 15,000 முதல் 20,000 ரூபாய் வரையில் சம்பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில் 94 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர்களை நீண்ட நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க முடியாததால் – அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட மேலும் கூறினார்.

பெரும்பாலான பிச்சைக்காரர்கள் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாகியுள்ள நிலையில், பிச்சை எடுப்பதில் முழுநேர தொழிலாக சிலர் ஈடுபடுவதாகவும், அவ்வாறான நபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்