
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தவறான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளளது.
குறித்த தடை உத்தரவு 2024 ஜனவரி 21 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான வழங்கியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் தாக்கல் செய்த மனுவை இன்று (ஜன. 08) பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



