
இஸ்ரேல் மீது நேற்று சனிக்கிழமை ஹாமாஸ் போராளிகள் ஆரம்பித்த ரொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பிலும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலும் போர் தொடங்குவதாக அறிவித்தது.
நேற்று 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 05 ஆயிரம் ரொக்கட்களை ஏவியதாக செய்திகள் கூறுகின்றன. பின்னர் மேலும் 02 ஆயிரம் ரொக்கட்கள் இஸ்ரேல் மீது வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஹமாஸ் நிலைகொண்டுள்ள காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அங்கு 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே இரண்டு தரப்புகளிலும் சுமார் 500 பேர் வரை இறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் இந்தத் தாக்குதல் இஸ்ரேலுக்கு எதிர்பாராத பாரிய அடியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை ஆரம்பித்த அதேவேளை இஸ்ரேல் எல்லைக்குள்ளும் ஹமாஸ் போராளிகள் நுழைந்து, அங்கும் தாக்குதலை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனையடுத்து பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மறுபுறமாக இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே குறைந்தது இஸ்ரேலின் 22 இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.
ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.



