இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது

🕔 October 8, 2023

ஸ்ரேல் பாதுகாப்பு படை சிரேஷ்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி – ஹமாஸ் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆழ ஊடுருவும் பிரிவு மற்றும் ராணுவக் கல்லூரிகளின் தலைவராக நிம்ரோட் அலோனி பதவி வகிக்கின்றார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, “இஸ்ரேலின் சிரேஷ்ட அதிகாரிகள்” பிடிபட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

ஹமாஸ் போராளிகள் கைது செய்துள்ள சிரேஷ்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் காஸா பிரிவுக்கான முன்னாள் தளபதியாவார். அவரை டி-ஷர்ட் மற்றும் உள்ளாடையுடன் தெருவில் இழுத்துச் செல்லும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

2021 ஆண்டு காஸா பகுதியில் இஸ்ரேலின் ராணுவ தாக்குதலான ‘ஒபரேஷன் கார்டியன் ஆஃப் தி வோல்ஸ்’ (Operation Guardian of the Walls) நடவடிக்கை – மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) அமைப்பின் இலக்குகளுக்கு எதிரான மூன்று நாள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் கட்டளைத் தளபதியாகவும் மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி செயற்பட்டார்.

அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தெற்கு இஸ்ரேலுக்குள் – ஹமாஸின் சுரங்கப்பாதைகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை முடக்கியதாக நிம்ரோட் அலோனி அறிவித்தார்.

இருப்பினும் மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி கைது செய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) மறுத்துள்ளது.

இதேவேளை சுமார் 50 இஸ்ரேலிய பொதுமக்களை – ஹமாஸ் போராளிகள் கடத்தியுள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்