எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி
புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை – சிறுநீரக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதியோர்கள் என மொத்தம் 647,683 பேருக்கு தற்போதுள்ள கொடுப்பனவுகளை எந்த மாற்றமும் இன்றி வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
517,962 முதியோர்கள், 88,602 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 41,119 சிறுநீரக நோயாளிகள், அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் உள்ளடக்கியோருக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
எதிர்வரும் நாட்களில் இவர்களுக்கான பணம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் தங்களுடைய கொடுப்பனவுகளை தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் பிரதேச செயலகங்களில் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.