தலைப்புச் செய்திகள்

பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

மெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் அண்மையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பெசல் ராஜபக்ஷ நேற்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்.

அவரை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்ரா பெனாண்டோ மற்றும் உறுப்பினர் எம்.பி.பி. பெரேரா ஆகியோர் சந்தித்தனர்.

அன்று பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றபோது தடுத்துநிறுத்தப்பட்டார். இன்று பொலிஸாருடன் தொடர்புடையவர்கள் நேரில் சென்று அவருக்கு வரவேற்பளிக்கின்றனர்.

இவ்வாறான விடயங்கள் நடக்கும்போது, ஆணைக்குழுக்கள் எவ்வாறு சுயாதீனமாக இயங்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே குறித்த இருவரும் உடனடியாக பொலிஸ் ஆணைக்குழுவிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தற்போது ஆணைக்குழுக்களின் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பிய போது அவரை விமான நிலையம் சென்று, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும அமைச்சர்கள் வரவேற்றிருந்தனர்.

ஆனால், ராஜபக்ஷ குடும்பத்தினர் எவரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

வீடியோ