மலேசிய பொதுத் தேர்தல்: ஆட்சியமைக்க எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை; முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி
இந்த நிலையில், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மட் போட்டியிட்ட தொகுதியில் – தேர்தல் கட்டுப்பணத்தை இழந்து படுதோல்வியடைந்துள்ளார். 24 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மகாதீர் போட்டியிட்டு வென்றார். இம்முறை அந்த வெற்றியைத் தக்க வைக்க அவரால் முடியவில்லை.
இம்முறை அவருக்கு 4,566 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மகாதீரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 25,463 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற டொக்டர் மகாதீர், கட்டுப்பணத்தையும் இழந்தார். ஐந்து வேட்பாளர்களில், மகாதீர் நான்காவதாகவே வந்தார்.
97 வயதான மகாதீர் 1969ஆம் ஆண்டு – முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது தொடக்கம், அவர் எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவியதில்லை. ஏறக்குறைய 53 ஆண்டுகளாக அவர் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார்.
15ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் ஒருவேளை தோல்வி கண்டால் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இது அவரது அரசியல் பயணத்தில், தேர்தல் களத்தில் அவர் சந்தித்துள்ள முதல் தோல்வி.
ஆட்சி அமைக்க முயன்று வரும் தரப்பினர், இன்று மாலைக்குள் மலேசிய மன்னரிடம் எம்பிக்களின் ஆதரவுப் பட்டியலை அளிக்க வேண்டும் என்று அரண்மனை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.