ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

🕔 February 6, 2022

ண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மறு அறிவித்தல் வரும் வரை இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசியை பஹ்மிதாவை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்பதற்கான கடிதம் – முதலில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இருந்தும் பின்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் இருந்தும் ஆசிரியைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தனது தற்காலிக இடமாற்றம் சட்டவிரோதமானது என்றும், இந்நடவடிக்கையானது தன்னை மீண்டும் இழுத்தடிப்புச் செய்வதற்கான செயற்பாடு எனவும் குறிப்பிட்டு, ஆசிரியை பஹ்மிதா றமீஸ் – தனது கணவரின் ஊடாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலையிலுள்ள பிராந்திக் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் வேளை, குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் சட்டமாணி றாஸி முஹம்மத், அமைப்பின் சட்டப் பிரிவின் பொறுப்பாளர் முகைமின் காலித் மற்றும் சட்டத்தரணி சாதிர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இதன்போது பேசிய சட்டத்தரணி முகைமின் காலித்; “ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை. அது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்றது. ஆசிரியை பஹ்மிதாவை ஷண்முகா வித்தியாலயத்திற்கு கடமையேற்குமாறு கல்வி அமைச்சு கடிதம் அனுப்பி இருக்க, அதனை நிறைவேற்றாமல் கல்வி அமைச்சை விட அதிகாரம் குறைந்த மாகாணப் பணிப்பாளர் எவ்வாறு – கல்வி அமைச்சின் அதிகாரத்தை மேவ முடியும்” எனக் கேள்வியெழுப்பினார்.

“தேசிய பாடசாலை ஆசிரியரொருவரை இடமாற்ற வேண்டுமென்றால் கல்வி அமைச்சின் அனுமதியின்றி அதனை நிறைவேற்ற முடியாது.

ஆனால் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெறாமல் ஆசிரியை பஹ்மிதாவை கிழக்கு மாகாண கல்விப் பணிமனை இடமாற்றியது சட்டவிரோதமானது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

குரல்கள் இயக்கம் குறிப்பிட்ட இடமாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக தயாராகின்றது என அதன் தவிசாளர் சட்டமாணி றாஸி முஹம்மத் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்