தலைப்புச் செய்திகள்

200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர்

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26 ஆம் திகதியன்று விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான நிலைய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், பயண முகவர்களுக்கும் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்தில் கிருமி நீக்கம், சுங்க மற்றும் குடிவரவு நடவடிக்கைகள், அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் மற்றும் சுற்றுப்பயணத்துக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்வது குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் உபுல் தர்மதாஸ தெரிவித்தார்.

இதேவேளை நாடு திரும்ப முடியாத இலங்கையர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் – வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்ப முடியும் என்றும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.

அதன்படி ஒரு நாளைக்கு வரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 3,500 ஆக இருக்கலாம் எனவும் உபுல் தர்மதாஸ தெரிவித்தார்.