தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

🕔 March 10, 2020

முகம்மது தம்பி மரைக்கார்

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றினை தாம் மீறி விட்டதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த உரையில் ஹரீஸ் தெரிவித்திருந்தார்.

“ரணிலின் ‘பஸ்’ஸில் ஏறக் கூடாது என்று – மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசத்தை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக, சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிறோம்” என்று சொல்லி, பொத்துவில் பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே, இந்த மன்னிப்பை ஹரீஸ் கேட்டிருந்தார்.

அஷ்ரப் சொன்னது என்ன?

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப், 2000ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நடந்த நிகழ்வொன்றில் ஆற்றிய உரையொன்றில்; ரணில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இணைந்து பயணிக்காது என்று கூறியிருந்தார். “ஐக்கிய தேசியக் கட்சி எனும் பஸ் வண்டியின் சாரதியாக, ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரையில், அந்த வண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் பயணிக்காது” என்று, அஷ்ரப் அன்று கூறியதை, ஒரு வேத வாக்குப் போல், அவ்வப்போது சிலர் நினைவுகூர்வதுண்டு.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரையில், அந்தக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கூட்டுச் சேராது என்று அஷ்ரப் கூறியதை, அவரின் மறைவுக்குப் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக மீறியிருக்கிறது. கடந்த காலங்களில் உள்ளுராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கிய வேட்பாளர்களுக்கும் மட்டுமே, அஷ்ரப்புக்கு பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது.

ரணில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில்லை என்று அஷ்ரப் எடுத்த அந்தத் தீர்மானத்தை, அவருக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தெரிந்தே மீறி வந்தது. ரஊப் ஹக்கீமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புக் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துதான் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாகப் பயணித்து வந்துள்ளது.

ஆக, அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் சுமார் 20 வருடங்கள் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் ‘தேன் நிலவு’ அனுபவித்து விட்டு, இப்போது திடீரென ஞானம் வந்தமை போல், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பேசுவதற்கும், மன்னிப்புக் கோருவதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

அரசியல் நாடகம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இந்தக் கூட்டணியில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்று இன்னும் முடிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுமுள்ளது.

ஆக, அஷ்ரப்பின் தீர்மானத்தை மீறி, இத்தனை ஆண்டுகள் ரணிலுடன் கூட்டணி வைத்தமைக்காக, இப்போது வந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மன்னிப்புக் கோருவது, அரசியல் நாடகமொன்றுக்கான முன்னேற்பாடாகும்.  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தரப்புடன் சேராமல், சஜித் அணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு வைத்துக் களமிறங்குவது கூட, அஷ்ரப்பின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் என்று பிரசாரம் செய்வதற்கு, இதனூடாக ஹரீஸ் முயற்சிக்கின்றார் என்பது புரிகிறது.

அதாஉல்லாவின் கொள்கை

”ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில், முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் பயணிக்காது என்று அஷ்ரப் கூறியதால், ரணில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒருபோதும் நான் இணைந்து செயற்பட மாட்டேன்” என்று கூறி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா கடந்த 20 வருடங்களாக அரசியல் செய்து வருகின்றார். அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி – தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அதாஉல்லா ஒருபோதும் கூட்டு வைத்துக் கொண்டதில்லை.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் அதாஉல்லா செல்லாமைக்கான காரணம்; அவரது அரசியல் வைரியான மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், தொடர்ச்சியாக ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டமையினால்தான் என்றும், அஷ்ரப் சொல்லி விட்டார் என்பதற்காக ஒன்றும், ரணிலை அதாஉல்லா புறக்கணிக்கவில்லை எனவும் அரசியல் மேடைகளில் கூறப்படுவதும் உண்டு.

இருந்தபோதும் வெளிப்படையாகப் பார்க்கையில்; ‘ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் ஏறுவதில்லை’ என்கிற அஷ்ரப்பின் தீர்மானத்தை, முஸ்லிம் காங்கிரஸை விடவும் கெட்டியாகக் கடைப்பிடித்து வருபவர் அதாஉல்லாதான்.

மறுபுறமாக “ரணிலின் பஸ்ஸில் ஏறுவதில்லை” என்று அஷ்ரப் கூறியைதை, முஸ்லிம் காங்கிரஸ் தவறுதலாக மீறவில்லை என்பதையும் நாம் இங்கு புரிந்து கொள்தல் அவசியமாகும். அஷ்ரப்பின் வார்த்தைகளை மீறுகிறோம் என்று தெரிந்துகொண்டுதான், மீள – மீள அவரின் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் மீறி வந்துள்ளது.

அஷ்ரப்பும் அரசியலும்

இது ஒருபுறமிருக்க, ஏதோவொரு காலகட்டத்தில் ஏதோவொரு அரசியல் சூழ்நிலையில்; “ரணிலின் பஸ்ஸில் முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்காது” என, அஷ்ரப் கூறியதை, ஒரு வேத வாக்கினைப்போல் எடுத்துக் கொண்டு, அதனை கடைசி வரையும் பின்பற்றத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் உள்ளது.

அஷ்ரப் கூறிய பல அறிவுரைகளையும், அவர் எடுத்த தீர்மானங்களையும், அவரின் பாசறையில் வளர்ந்த அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர், தமது வசதிகளுக்காக மறந்து விட்டனர். அதேவேளை, அஷ்ரப்பினுடைய சில வார்த்தைகளையும் கருத்துக்களையும் வேத வாக்குகளைப் போல் பின்பற்ற வேண்டும் என்று, அதே நபர்கள் தங்கள் சுயநலனுக்காக கூறியும் வருகின்றனர்.

தமிழரசுக் கட்சியில் அஷ்ரப் இணைந்து பணியாற்றிய காலகட்டத்தில்; “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத்தரவில்லை என்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்றுகூட ஒருமுறை அஷ்ரப் கூறியிருந்தார். ஆனால், அதனை, அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகள் எவரும் தூக்கிப் பிடிப்பதில்லை. காரணம் ஏன் என்று மக்கள் அறிவார்கள். அதேபோன்று “ரணில் சாரதியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்காது” என்று அஷ்ரப் கூறியதை மட்டும், வேத வாக்கினைப் போல் அவ்வப்போது, இவர்கள் உயர்திப் பிடித்துக்  கொண்டிருப்பதிலுள்ள அரசியல் என்ன என்பதையும் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

தமக்கான அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்தவர் என்கிற வகையில், அஷ்ரப்பை முஸ்லிம் சமூகம் – ஆத்மார்த்தமாக நேசிக்கின்றது. அரசியல் நெருக்கடிகளில் முஸ்லிம்கள் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், ‘அஷ்ரப் இல்லையே’ என்று – அந்த மக்கள் கவலையடைகின்றனர். அரசியலுக்கு அப்பாலும் முஸ்லிம்களால் அஷ்ரப் நேசிக்கப்படுகிறார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். ஆனால், அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொள்ளும் பலர், தத்தமது அரசியலுக்காகவே அஷ்ரப்பை அவ்வப்போது கையில் எடுக்கின்றார்கள். தேர்தல் மேடைகளிலும், தமது பிரசாரங்களுக்காக வெளியிடும் துண்டுப் பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் மட்டும், அஷ்ரப்பை இவ்வாறானவர்கள் அவ்வப்போது ‘உயிர்த்தெழ’ச் செய்கின்றார்கள்.

அஷ்ரப் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பையும் அபிமானத்தையும் எவ்வாறு தங்கள் அரசியலுக்கான முதலீடாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதை, அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்வோர் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். ‘அஷ்ரப்’ என்கிற பெயரால் முஸ்லிம் மக்களை அரசியல் ரீதியாக எப்படியெல்லாம் உணர்ச்சியூட்டலாம் என்று, முஸ்லிம் அரசியல்வாதிகள் தெரிந்தும் வைத்திருக்கின்றார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் பொத்துவில் உரை, அதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

ஏமாற்று அரசியல்

அரசியலில் அறிவு ரீதியாக மக்கள் சிந்திக்காமல், உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதனாலேயே, அரசியல்வாதிகளால் மிக இலகுவாக ஏமாற்ற முடிகிறது. உணர்சி யூட்டும் கட்சிப் பாடல்களுக்கு மயங்கி, தேர்தல்களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆதரவாளர்கள் இருக்கும் வரையிலும்… அரசியல்வாதிகளை தோள்களில் தூக்கிச் சுமக்கும் தொண்டர்கள் இருக்கும் வரையிலும்… அஷ்ரப்பின் படத்தை வேட்பாளர்களின் சுவரொட்டிகளில் பார்த்ததும் கசிந்துருகி அரசியல் தீர்மானங்களை எடுக்கும் வாக்காளன் இருக்கும் வரையிலும்… ‘ஏமாற்று அரசியல்’ தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

மக்களிடம் ஹரீஸ் உண்மையாகவே மன்னிப்புக் கேட்பதென்றால், அதற்கு ஏராளமான விடயங்கள் உள்ளன. அவர் மக்களுக்கு வழங்கி, இன்றைவரை நிறைவேற்றாத வாக்குறுதிகள் எக்கச்சக்கம் உள்ளன. அவை தொடர்பில் ஹரீஸ் இதுவரை எந்தவித மன்னிப்பையும் மக்களிடம் கேட்கவில்லை. உதாரணமாக, கல்முனைத் தொகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 1900 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்த அபிவிருத்திப் பணிகளை 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யாமல், அடுத்த பொதுத் தேர்தலுக்கு வர மாட்டேன் என்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூறியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. ஹரீஸ் அவ்வாறு தெரிவித்தமை பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்திருந்தது. ஆனால், ஹரீஸ் கூறிய 1900 மில்லியன் ரூபா நிதியில், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படவில்லை. எனவே, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஹரீஸ் போட்டியிடாமல் இருப்பதுதான் அவரின் வாக்குறுதியை – அவர் காப்பாற்றுவதாக அமையும். அதனை ஹரீஸ் செய்வாரா என்று மக்கள் கேட்கின்றனர்.

பொத்துவிலில் ஹரீஸ் மன்னிப்புக் கோரி ஆற்றிய உரையில்;  ”ரணிலின் முதுகெலும்பில்லாத கடந்த ஆட்சியில், நாங்கள் பங்காளிகளாக இருந்தபோதும் கூட, ஒரு துரும்பைக் கூட எங்களால் அசைக்க முடியவில்லை” என்றும் கூறியிருந்தார். “பொத்துவில் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டமைக்கு ரணில் விக்ரமசிங்கவின் தவறுதான் காரணமாகும். கடந்த ஆட்சியில் ஒரு கல்வி வலயத்தை உருவாக்குவதற்குக் கூட, சம்பந்தனின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலை இருந்தது” என்றும் அந்த உரையில் ஹரீஸ் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் கடைசிவரை பங்காளியாக இருந்து, ரணிலின் ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் பதவியினையும் அனுபவித்த ஹரீஸ்; இப்போது அதே அரசாங்கத்தை ‘முதுகெலும்பில்லாத அரசாங்கம்’ என்று – குறை கூறுவதும், அந்த ஆட்சியில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில், தாங்கள் அதிகாரமற்று இருந்ததாகச் சொல்வதும், மக்களை ஏமாற்றும் அரசியலாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், மக்களிடம் மனந்திறந்து மன்னிப்புக்  கோருவதற்குத் தயார் என்றால், ஓர் அரசியல்வாதியாக அவர் எதற்கெல்லாம் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்கான ஒரு பட்டியல் நம்மிடம் உள்ளது. அதனை வழங்க நாம் தயாராக உள்ளோம்.

அதேவேளை, சில பிழைகளுக்கு மன்னிப்புக் கோருவது மட்டும் தீர்வாக அமையாது என்பதையும் இங்கு நினைவுபடுத்துதல் அவசியமாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (10 மார்ச் 2020)

Comments