பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

🕔 May 19, 2019

– பாறுக் ஷிஹான்

வீதியில் சைக்கிளில்  சென்றவரை இரும்புத் தடியால் தாக்கி விட்டுத் தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

ஸம் ஸம் வீதியை சேர்ந்த முகம்மது பஸில் தம்சீர் (வயது 49) என்பவர் மீன்களை கொள்வனவு செய்து அதனை தனது வீட்டுக்கு சென்று கொடுத்து விட்டு வெளியேறி வீதியால் சென்றுள்ளார்.

அதே  நேரம் அவ்வீதியை சேர்ந்த மருதமுனை வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றுகின்ற ஏ.எம். தமீம் என்பவர் திடீரென  இரும்பு குழாயினால் தலையில் பலமாக தாக்கி விட்டுத் தப்பி சென்றுவிட்டார்.

இரத்த வெள்ளத்தில்  கிடந்த முகம்மது பஸில் தம்சீர் என்பவரை அயலவர்கள் தூக்கி முச்சக்கரவண்டி ஒன்றில் மருதமுனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை  மேற்கொள்ள மறுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். மேலும் அடித்த சந்தேக நபர் அதே வைத்தியசாலையில் நின்று கொண்டிருந்ததாகவும் கூறினர்.

தொடர்ந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது சுயநினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

தாக்குதலின் நோக்கம்

தாக்குதலுக்குள்ளான நபருடன் தாக்கிய நபர் கடந்த 2016 அன்று  முரண்பட்டு சமாதானமாக செல்வதாக தெரிவித்தார். இந்த நிலையிலேயே தற்போது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த நபரை அவரது வீட்டருகே நிற்கின்ற இளைஞர்களும் தாக்கியவரும் கேலி செய்வதாகவும் இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதானம் ஆனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்