தவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்

🕔 December 30, 2017

– ஆசிரியர் கருத்து –

தேர்தல் சட்டங்கள் குறித்து நம்மவர்களில் கணிசமானோர் அறிந்தவர்களாக இல்லை. அதனால்தான், தேர்தல் காலங்களில் அநேகமமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கண்ட இடத்திலெல்லாம் வேட்பாளர்களின் விளம்பர பதாதைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, வாக்குச் சீட்டின் மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதெல்லாம், ஏதோ தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மேற்சொன்னவை அனைத்தும் சட்ட விரோதமானவையாகும். இவற்றினை மேற்கொள்கின்றவர்களை பொலிஸார் கைது செய்து, தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.

நடந்தது

உதாரணமாக ஒரு சம்பவம். கடந்த புதன்கிழமையன்று, உடத்தும்பறை பிரதேசத்தில் வேட்பாளர்களின் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த நால்வரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து 83 சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டன. பின்னர் இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம், ஊடகங்களில் செய்திகளாகவும் வெளிவந்திருந்தன.

இப்போது விடயத்துக்கு வருவோம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, அந்தப் பிரதேசத்தில் நடந்த சில அநியாயங்கள் குறித்து, முஸ்லிம் காங்கிரஸ்காரமும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினருமான, அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல். தவம் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிவொன்றினை இட்டுள்ளார்.

அநீதிகள்

அந்தப் பதிவில், அவர்களுக்கு நடந்த இரண்டு அநீதிகள் குறித்து தவம் குறிப்பிட்டுள்ளார். அவை;

அநீதி – 01

அக்கரைப்பற்று காதிரியா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு வெளியில், ஜும்ஆவுக்கு பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மு.கா. வேட்பாளர், தாம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வுக்கான அழைப்பிதழை மக்களுக்கு பகிர்ந்துள்ளார். அப்போது, அங்கு வந்த தேசிய காங்கிரசின் அந்தப் பகுதி வேட்பாளர், மு.கா. வேட்பாளரின் கையிலிருந்த அழைப்பிதழ்கள் அனைத்தினையும் பறித்துள்ளார்.

அநீதி – 02

யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவர், அக்கரைப்பற்றில் கடந்த புதன்கிழமை ஒட்டிய தேர்தல் சுவரொட்டிகளை, தேசிய காங்கிரசின் மேற்சொன்ன வேட்பாளர் கிழித்தெறிந்திருக்கின்றார்.

இந்த சம்பவங்கள் குறித்து,  தனது கோபத்தினை பதிவு செய்துள்ள தவம்; இவை குறித்து, உதவித் தேர்தல் ஆணையாளரிடம் தொலைபேசி மூலம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த உதவித் தேர்தல் ஆணையாளர், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வேட்பாளர் அந்தஸ்தினைக் கூட பறிக்க முடியும் என்று, தன்னிடம் கூறியதாகவும் பதிவு செய்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் தவம் எழுதியுள்ள மேற்படி பதிவினில், அவர் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமொன்றினை வழங்கியுள்ளதோடு, உண்மைக்குப் புறம்பான ஒரு விடயத்தினையும் கூறியுள்ளார்.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலம்

தமது கட்சி வேட்பாளர் ஒருவர், தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார் என்று, தனது பதிவில் தவம் – குற்ற ஒப்புதல் வாக்கு மூலமொன்றினை, தன்னை அறியாமலேயே இங்கு வழங்கியுள்ளார்.

அதாவது, தமது கட்சி வேட்பாளர் ஒருவர் சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்டமையினை, தவம் தனது பதிவில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

உண்மைக்கு புறம்பானது

உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்ததாக, தவம் இங்கு தெரிவித்துள்ள விடயம் உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கும்.

ஏனெனில், தேர்தல் சுவரொட்டியினை ஒட்டுவது சட்ட விரோதமான செயற்பாடு என்பது, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு தெரியாத விடயமல்ல. எனவே, அவ்வாறு சட்ட விரோதமாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழிப்பது குற்றமாகாது.

வேட்பாளர்களின் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பொலிஸாரையும், பணியாட்களையும் அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், சட்ட விரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய வேட்பாளரை விட்டு விட்டு, அதனைக் கிழித்த வேட்பாளரின் ‘வேட்பாளர் அந்தஷ்தை’ இல்லாமல் செய்ய முடியும் என்று, எந்தவொரு உதவித் தேர்தல் ஆணையாளரும் கூறியிருக்க முடியாது.

எனவே, சட்ட விரோதமான விடயங்களை நியாயப்படுத்துவதும், முக்கியமான அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதும் நல்லதல்ல.

தேசிய காங்கிரசும், வன்முறையும்

இன்னொருபுறம், அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றமையினைத் தவிர்துக் கொள்தல் வேண்டும்.

தேசிய காங்கிரஸினரின் கடந்த கால தேர்தல் செயற்பாடுகளில், கணிசமானவற்றினை நற்பண்புள்ள மக்கள், அச்சத்துடனும் அருவருப்புடனும்தான் பார்த்தனர் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தமது எதிர்த்தரப்பினரைத் தாக்குவதற்கென்றே தேர்தல் காலங்களில் தேசிய காங்கிரசினர் ‘அடி பார்ட்டி’ எனும் பெயரில், ஒரு குழுவை இயக்கி வந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

தேசிய காங்கிரசினர் கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனமைக்கு, இந்த வன்முறைச் செயற்பாடுகளும் முக்கிய காரணமாக இருந்தது.

எனவே, தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, இந்த விடயத்தில் தனது கட்சி வேட்பாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வன்முறையற்ற ஓர் தேர்தலை நடத்திக் காட்டுவேன் என்கிற ஓர் உறுதிமொழியினை அதாஉல்லா பகிரங்கமாக விடுப்பதோடு, அதனைச் செயற்படுத்தியும் காட்டுதல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்