மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல்

🕔 November 21, 2017
– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கற்கும், 10 வயதிற்குட்பட்ட  மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதே பாடசாலையின் அதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

மேற்படி அதிபரை சம்மாந்துறை பொலிஸார் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு,  நீதிவான் எச்.எம். முஹம்மட் பஸீல் உத்தரவிட்டார்.

அதேவேளை, அதிபர் தொடர்பில் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் மனநல மருத்துவர் ஆகியோரின் மருத்துவ அறிக்கைகளை பெறுமாறும் இதன்போது நீதவான் உத்தவு வழங்கினார்.

குறித்த சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்ட அதிபரை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் விசாரணை செய்த போது, தரம் 05இல் கல்வி கற்கும் சம்பந்தப்பட்ட மாணவிகள் மூவரிடமும் – தான்  பாலியல் சேட்டை புரிந்தமையினை, அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.

இருந்தபோதிலும், இக் குற்றச் சம்பவம் தொடர்பாக குறித்த அதிபரை சட்டத்தின்  முன்பாக நிறுத்துவதற்கு, வலயக் கல்விப் பணிப்பாளர் தவறியிருந்தார்.

அதனால், அந்த விவகாரம் தொடர்பாகவும் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்தவராவார்.

இவர் தொடர்பில் ‘புதிது’ இணையத்தளம் சில தகவல்களை இதுவரையில் திரட்டியுள்ளது.

குறித்த நபர் இதற்கு முன்னர் கடமையாற்றிய பாடசாலைகளிலும், இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார் எனவும் அறிய முடிகிறது.

Comments