கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

🕔 November 21, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

றுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு, சேதங்களைப் பார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் களத்துக்கு வந்து போகிறார்கள்.

கிந்தோட்டயில் முஸ்லிம்களின் 66 வீடுகள், 26 கடைகள், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீவைக்கப்பட்ட பிறகுதான், பிரதம மந்திரியும் பாதுகாப்பு அமைச்சரும் சம்பவ இடங்களுக்கு வந்து, “குற்றவாளிகள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படுவார்கள்” என்கிற, மாமூலான வார்த்தைகளை, உறுதிமொழியாக வழங்கி விட்டுச் சென்றிருக்கின்றனர்.

கிந்தோட்டயில், இப்படியொரு வன்முறை நடக்கப் போகிறது என்பதை விளங்கிக் கொண்டு, அவசரப் பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் அங்குள்ள முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அறிவித்திருந்த போதும், அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும், உரிய தருணத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

முஸ்லிம்களின் சொத்துகள் அடித்து நொறுக்கி, தீவைத்து எரிக்கப்பட்ட பின்னர்தான், பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டிருந்தனர்.
அளுத்கம முதல் கிந்தோட்ட வரையில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில், இப்படித்தான் நடந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள பேரினவாதத் தாக்குதல்களில், முறையான திட்டமிடல்களும் சில பொதுத்தன்மைகளும் காணப்படுகின்றமை கவனத்துக்குரியதாகும்.

கிந்தோட்டயில், கடந்த 13ஆம் திகதியன்று நடந்த வாகன விபத்தொன்றின் நீட்சியாகவே, இந்தக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. சிங்கள இளைஞன், செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளொன்று, முஸ்லிம் பெண் மீதும் அவரின் பிள்ளை மீதும் மோதியது. இதன்போது, விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பியோட, மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வந்த அவரின் நண்பரை, அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்கியதாக அறிய முடிகிறது.

இதையடுத்து தாக்கப்பட்ட சிங்கள நபர், தனது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு, தன்னைத் தாக்கிய முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கியிருக்கிறார். இதன் பின்னர், குறித்த முஸ்லிம் இளைஞர்கள், தம்மைத் தாக்கிய சிங்கள இளைஞர்களின் வீடு தேடிச் சென்று தாக்கியதாகவும், அவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அடிபிடிகளில், யார் சரி, யார் பிழை என்கிற கேள்விகள் ஒருபுறமிக்க, ஒரு விபத்துத் தொடர்பில் இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை, எப்படி இனங்களுக்கிடையிலான ஒரு பிரச்சினையாகவும் கலவரமாகவும் மாறியது என்கிற கேள்வி முக்கியமானது.

கிந்தோட்ட வன்முறைகள் நடந்து கொண்டிருந்த போது, அன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் களத்துக்குச் சென்றிருந்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். அதன் பின்னர், அவரின் ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்த செய்தியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

அதாவது, இந்த நாசகாரச் செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னணியில் அங்குள்ள பௌத்த மதகுரு ஒருவர் இருந்துள்ளார் என்றும், இதற்காக அங்குள்ள விகாரையொன்று பயன்படுத்தப்பட்டதாகவும் கிந்தோட்ட முஸ்லிம்கள் தன்னிடம் கூறினர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாக, அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்காக வெளியிடங்களிலிருந்து ஆட்களை, குறித்த மதகுரு வரவழைத்திருந்ததாகவும் அங்குள்ள முஸ்லிம்கள் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் குறித்த செய்தியில் அமைச்சர் ரிஷாட் கூறியிருந்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் போது, அவற்றின் பின்னணியிலும், முன்னணியிலும் அநேகமாகப் பௌத்த மதகுருக்கள் இருந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும். மேலும், வன்முறைகளைத் திட்டமிடுவதற்கும், அதற்கான ஆட்களைத் திரட்டுவதற்குமான இடமாக, பல சமயங்களில் விகாரைகள் இருந்துள்ளன என்பதும் இங்கு கவனிப்புக்குரியது.

கிந்தோட்டயில் நடந்தது, தற்செயலானதொரு வன்முறையாகத் தெரியவில்லை. வாகன விபத்தொன்றின் போது, ஏற்பட்ட முறுகலைக் காரணமாக வைத்து, மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு வன்முறை அங்கு அரங்கேற்றப்பட்டதாகவே பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

சில வருடங்களாக முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் போது, அவர்களின் சொத்துகள் மற்றும் வியாபார நிலையங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றமையைப் போலவே, கிந்தோட்டயிலும் முஸ்லிம்களின் 26 கடைகள் தாக்கப்பட்டிருக்கின்றன.

வாகனங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்காக பெற்றோல் குண்டுகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை வைத்து, இந்த வன்முறைகள் திட்டமிடப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இவ்வாறு நடைபெற்று, சொத்துகள் அழிவடைந்த பின்னர், நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்பட்டதில்லை; ஏற்படப் போவதுமில்லை.

தங்கள் வருமானத்துக்காக நடத்தி வந்த வியாபார நிலையங்கள் எரிக்கப்பட்ட பின்னர், மீளவும் அவற்றை ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்புவதென்பது பலருக்கு முடியாத காரியமாகும். மேலும், இந்த வன்முறையினால் ஏற்பட்ட உளப் பாதிப்புகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கும் நீண்ட நாட்களாகும்.

ஆனால், குற்றம் புரிந்தவர்கள் இரண்டு வாரங்களிலோ அல்லது இரண்டு மாதங்களிலோ, பிணையில் வெளியே வந்து விடுவார்கள். கடந்த காலங்களில், இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாக எந்தவித செய்திகளுமில்லை.

கிந்தோட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்டு, இம்மாதம் 30ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க, சம்பவ தினத்தன்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அங்குள்ள முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் உடைத்ததாக கிந்தோட்ட முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற மறுநாள், கிந்தொட்டப் பிரதேசத்துக்குச் சென்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்குள்ள முஸ்லிம் மக்களைச் சந்தித்துப் பேசியபோது, “விசேட அதிரடிப்படையினர் எனது வீட்டை உடைத்தார்கள்; அதை நான் நேரடியாகக் கண்டேன்” என்று, பாதிக்கப்பட்ட நபரொருவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்துத் தான் எந்த இடத்திலும் சாட்சி கூறுவதற்குத் தயாராக உள்ளதாகவும், அந்த நபர் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம்கள் மீது, பேரினவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட அநேகமான தருணங்களில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமையும் கவனத்துக்குரியதாகும்.

வன்முறையாளர்கள் அட்டூழியங்களைப் புரிந்த போது, பொலிஸார் கண்டும் காணாமல் இருந்தனர் என்றும், பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து, வன்முறையாளர்களுடன் அட்டூழியங்களைப் புரிந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்திருந்தார்கள்.

‘வேலியே பயிரை மேயும்’ இந்த அரக்க குணம் ஆபத்தானதாகும். அரசாங்கப் படையினராகச் செயற்பட வேண்டியவர்கள், சிங்களப் படையினராக நடந்து கொள்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு, முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அச்சுறுத்தலானதாகும்.

ஆனாலும், அளுத்கம தொடக்கம் கிந்தோட்ட வரையில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான பேரினவாதத் தாக்குதல்களின் போது, வன்முறைக்குத் துணை போனார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது படை வீரர் மீது, முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், “வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றமையானது, வெறும் கண்துடைப்பான உறுதிமொழி என்பதா என எழுகின்ற கேள்விகள் நியாயமானவையாகும்.

ஆட்சியாளர்களின் இவ்வாறான உத்தரவாதங்கள் மீது, முஸ்லிம்கள் இப்போது நம்பிக்கையிழந்து விட்டனர். முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான பேரினவாதத் தாக்குதல்களை ஆட்சியாளர்கள் உள்ளுக்குள் இரசிக்கின்றனரா என்கிற சந்தேகம் கூட, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமையை இங்கு பதிவு செய்தேயாக வேண்டியிருக்கிறது.

கிந்தோட்ட வன்முறைகளை நடந்திராமல் தடுத்திருப்பதற்கான அவகாசம் பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இருந்திருக்கிறது. மேலும், குறித்த வன்செயல்களை ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய இயலுமைகளும் பொலிஸாருக்கு இருந்திருக்கின்றன.

ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை எனப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர். கிந்தோட்டயில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றிருந்த அமைச்சர் ஹக்கீமிடம் அந்தப் பகுதி மக்கள், “பொலிஸார் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; அதுவும் காலி பொலிஸார் மீது, அறவே நம்பிக்கையில்லை” என்று தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஒரு நாட்டில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் மீது, தமக்கு நம்பிக்கையில்லை என்று, அதே நாட்டின் ஒரு மக்கள் பிரிவினர் கூறுவதென்பது வெட்கக் கேடான விடயமாகும். கிந்தோட்ட விவகாரத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பக்கச்சார்பின்றி பொலிஸார் நிறைவேற்றியிருந்தால், அவர்களுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்க முடியாது.

இன்னொருபுறம், காலத்துக்குக் காலம், முஸ்லிம்கள் மீது இவ்வாறான பேரினவாதத் தாக்குதல் நடப்பதும், அதன் பின்னர், அங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் செல்வதும் அறிக்கைகளை விடுவதுமாக இருந்தால், இதற்கு என்னதான் முடிவு என்கிற கேள்வி, முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிங்கள இனவாதச் செயற்பாடுகளுக்கு, எந்தவகையிலும் குறைவில்லாமல், நல்லாட்சியிலும் அட்டூழியங்கள் நடந்து வருகின்றன. தம்மீதான பேரினவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி விழும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து, நல்லாட்சியைக் கொண்டு வந்த முஸ்லிம்கள், ‘பேயைத் துரத்தி விட்டு, பிசாசுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டோமோ’ என கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான பேரினவாதத் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்துமாறு, ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அருகதைகளை, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இழந்து விட்டமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் ஆயிரம் அளுத்கம மற்றும் கிந்தோட்ட சம்பவங்கள் நடந்தாலும், ஆட்சியிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் வெளியேறப் போவதில்லை.

மஹிந்த ஆட்சியில் பேரினவாதிகள் தலைவிரித்து ஆடுகின்றனர் என்பதற்காக, மைத்திரிக்கு முஸ்லிம்கள் வாக்களித்தார்கள். ஆனால், இந்த ஆட்சியிலும் நிலைமை அதுபோலதான் இருக்கிறது. அப்படியென்றால், இனித் தமது அடுத்த நகர்வு அல்லது தெரிவு எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து, முஸ்லிம் சமூகம் தீவிரமாக யோசிக்காமல் இருக்க முடியாது.

தமிழர்களின் அரசியலிலுள்ள ஒற்றுமையும் சோரம் போகாத்தன்மையும் முஸ்லிம் அரசியலுக்கும் வந்து சேரும் வரை, இந்தத் துயரம் நீண்டு கொண்டேயிருக்கும்.
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும், முஸ்லிம் அரசியலின் ‘சொரணை’யற்ற தன்மையைச் சிங்களப் பேரினவாதம், மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

முஸ்லிம்கள் மீதான அளுத்கம தாக்குதலின்போது, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கு படிப்பினையூட்டும் வகையிலான முடிவுகளை அப்போது எடுத்திருந்தால், அதற்குப் பிறகு, முஸ்லிம்கள் மீது கைவைக்கும் பேரினவாதத்தின் படலம் இந்தளவு நீண்டிருக்காது. ‘கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆக வேண்டும்’ என்பார்கள்.

அது உண்மைதானோ.

நன்றி: தமிழ் மிரர் (21 நொவம்பர் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்