பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

🕔 October 8, 2017

– மப்றூக் –

பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட்லெப்பை ரத்துச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

பின்னணி

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை போன்ற இடங்களிலிருந்து பொத்துவில் பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமாயின் நாளாந்தம் சுமார் 100 கிலோமீற்றர் பயணிக்க வேண்டும். இதனால், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு பெரும்பாலான தூரப் பிரதேச ஆசிரியர்கள் விரும்புவதில்லை.

இந்த நிலையில், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுமாறு நியமிக்கப்பட்ட அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த கணிசமான ஆசிரியர்கள், கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் உதவியுடன் பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்றுக் கொண்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால், பொத்துவிலின் கல்வி நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

ஆயினும், பொத்துவில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு தொகை ஆசிரியர்கள், கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

இடமாற்றம்

இவ்வாறு பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும்  வெளி ஊர்களைச் சேர்ந்த 36 ஆசிரியர்களுக்கு, அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல். காசிம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுமாறு இடமாற்றங்களை வழங்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் திகதியும் அதற்கு முன்னதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. குறித்த ஆசிரியர்களுக்கும் இந்த இடமாற்றமானது பெரும் ஆறுதலாக அமைந்திருந்தது.

பொத்துவில் பாடசாலைகளின் அதிபர்கள் கூட்டத் தீர்மானத்தின் படியும், பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுக்கு அமைவாகவுமே மேற்படி ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை, வலயக் கல்விப் பணிப்பாளர் காசிம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். காசிம், மூதூர் வயலக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கடந்த வாரம் இடம்மாற்றம் பெற்றுச் சென்றார். அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கிண்ணியா வலயயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எம். அஹமட்லெப்பை பொறுப்பேற்றார்.

புதியவரின் உத்தரவு

இந்த திடீர் மாற்றங்களையடுத்து, பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்கள் 36 பேருக்கும் வழங்கப்பட்ட இடமாற்றங்களை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட்லெப்பை உடனடியாக ரத்துச் செய்தார். மேலும், முன்னைய வலயக் கல்விப் பணிப்பாளர் காசிம், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை சரிசெய்யும் பொருட்டு, உள்ளுர் ரீதியாக சில இடமாற்றங்களை வழங்கியிருந்தார். அவற்றினையும் புதிய பணிப்பாளர் ரத்துச் செய்துள்ளார்.

இந்த வகையில் மொத்தமாக, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை புதிய பணிப்பாளர் ரத்துச் செய்துள்ளார் எனத் தெரியவருகிறது.

மட்டம் தட்டும் முயற்சியா?

புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் இந்த நடவடிக்கை காரணமாக, பொத்துவிலில் நீண்ட காலம் கடமை புரிந்த நிலையில் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள், மிகப்பெரும் ஏமாற்றத்துக்கு ஆகியுள்ளனர். மேலும், பாடசாலைகள் மட்டங்களிலும் இந்த செயற்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் இடமாற்றங்கள் எவையும் வழங்கப்படக் கூடாது என, ஆளுநர் உத்தரவிட்டுள்ளமையினாலும், அந்த உத்தரவுக்கிணங்கவே மேற்படி இடமாற்றங்களை புதிய பணிப்பாளர் அகமட்லெப்பை ரத்துச் செய்துள்ளதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஆனால், மேற்படி இடமாற்றங்கள் அனைத்தும் – கிழக்கு மாகாணசபை கலைவதற்கு முன்னர் திகதியிடப்பட்ட கடிதங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, மேற்படி ஆசிரியர்களின் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டமையின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

பொத்துவிலில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் அதிகமானோர் அட்டாளைச்சேனை பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், தற்போது இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டமை காரணமாக, அட்டாளைச்சேனையிலுள்ள பாடசாலைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அவ்வாறாயின், ஒரு பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை திட்டமிட்டு மட்டம் தட்டும் முயற்சியாக, மேற்படி செயற்பாடுகள் இருக்கிறதா என்கிற சந்தேகமும் உருவாகியுள்ளது.

எனவே, அக்கரைப்பற்றின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர், மேற்படி விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட தரப்புக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலும், இன்னும் தொடர்ச்சியாகவும் , ஓர் ஊடகம் எனும் வகையில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகளை புதிது செய்தித்தளம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்