விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

🕔 August 10, 2017

– சுஐப். எம். காசிம் –

டற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் முறையிட்டுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முள்ளிக்குளம்  கிளை நிர்வாகிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, அந்த பிரதேசத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முள்ளிக்குளம் தலைவர் அப்பையா லெம்பேட், செயலாளர் அமிர்தம் குரூஸ், உப செயலாளர் செல்வராஜ் குரூஸ் மற்றும் பொருளாளர் பி. சதீஸ் ஆகியோர் அடங்கிய முக்கியஸ்தர்கள் குழு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, ஏற்கனவே தாங்கள் விடுத்த கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றி தந்தமைக்கு நன்றி கூறினர். மேலும், வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைச்சர் அமைத்து கையளிக்கப்பட்ட 20 வீடுகள், வறிய மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் சில பாதைகள் இன்னும் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும்,  நீருக்கான கஷ்டம் தங்களை வாட்டிவதைப்பதால் மேலும் பல நீர்த்தாங்கிகளை பொருத்தித்தர நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

கிராம மக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு என்றுமே நன்றி கடன்பட்டவர்களாக இருப்பர். கடந்த காலங்களில் நாங்கள் எங்களது கிராமத்திற்கு  உங்களை அழைத்திருந்தால் மேலும் பல விமோசனங்களை பெற்றிருக்கமுடியும்.  அவற்றை நினைந்து தாங்கள் தற்போது வருந்துகின்றோம்.‘  என்று சுப்பையா லெம்பேட் தெரிவித்தார்.

அமைச்சர் இதன் போது கூறுகையில்;

“துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்  உங்களிடம் வந்து, நான் அரசியல் நடத்த விரும்பவில்லை. வாக்குகளுக்காகவும் உங்களுக்கு உதவி செய்யவுமில்லை. நீங்கள் கடந்த காலங்களில் என்னை நெருங்குவதற்கு அச்சப்பட்டீர்கள். இப்போது உண்மையை உணர்ந்துள்ளீர்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்