பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி
வெளிவிவகார அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதாக, ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார்.
கவலையுடனோ, அழுத்தங்களின் பேரிலோ இவ்வாறு – தான் ராஜிநாமா செய்யவில்லை என்றும், பெருமையுடன் இதனைச் செய்வதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு உரையாற்றிய போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சட்ட விரோதமாக வீடு ஒன்றினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
“எனது செல்வம் குறித்து எல்லோரும் அறிவர். எனது கட்சியைச் சேர்ந்தவர்களும், வேறு பலரும் எனது வீட்டுக்கு வந்துள்ளீர்கள்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களிடம் சட்ட மா அதிபர் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால், கடந்த அரசாங்கத்தில் இப்படியிருக்கவில்லை. அதிகாரிகள் தங்கள் விசாரணைகளைத் தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றும் இதன்போது கூறினார்.
ஜனநாயகத்துக்காகவும், நல்லாட்சிக்காகவும் எனது பதவியை நான் தியாகம் செய்கிறேன். இவ்வாறான முடிவினை எழுத்தமையினையிட்டு நான் பெருமையடைகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.