நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

🕔 May 11, 2016

Nijami - 457ங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார்.

73 வயதான நிஜாமி, டாக்கா சிறைச்சாலையில், மரணிக்கும் வரை தூக்கிலிடப்பட்டார்.

பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதை போன்ற போர்குற்ற நடவடிக்கைகளில் நிஜாமி ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டுமுதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள எதிர்கட்சிகளின் மூத்த தலைவர்களில் நிஜாமி  ஐந்தாவது நபராவார்.

இதேவேளை, டாக்கா சிறைச்சாலைக்கு அருகில் கூடிய நூற்றுக் கணக்கானவர்கள், நிஜாமி தூக்கிலிடப்படுவது தொடர்பில் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆயினும், நிஜாமிக்கான இந்தத் தண்டனை அரசியல் பழிவாங்கலாகும் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நிஜாமி தூக்கிலிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அவரின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் நாளை வியாழக்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நிஜாமி தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், அவரை உறவினர்கள் சற்று நேரம் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

நிஜாமியின் ஜனாஸா – பங்களாதேஷின் வட பகுதியிலுள்ள அவரின் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷில் – நிஜாமியின் தூக்கு தண்டனையினை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிஜாமி தூக்கில் இடப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவிப்போர்

நிஜாமி தூக்கில் இடப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவிப்போர்

நிஜாமியை சந்தித்து விட்டுத் திரும்பிய உறவினர்கள்

நிஜாமியை சந்தித்து விட்டுத் திரும்பிய உறவினர்கள்

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்