தலைப்புச் செய்திகள்

அனோஜனை மன்னித்தது சஊதி அரேபியா: விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

முஹம்மது நபியை பேஸ்புக்-இல் அவதூறாக எழுதிய குற்றத்துக்கா சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜை அனோஜன் சிவராசா, அந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார் என, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சஊதி அரேபியாவில் அவர் எதிர்கொண்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனோஜனின் உறவினர்கள் நேற்று – வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று, அவரது விடுதலையை உறுதி செய்ய உதவிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பிற அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதல், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ராஜதந்திர தலையீடுகள், சஊதி அரேபிய அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமே இந்த விடுதலை சாத்தியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளின் ராஜதந்திர தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள், அத்துடன் இந்த வழக்கில் உதவுவதற்காக சஊதி அரேபியாவிற்குச் சென்ற சட்டக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையும் அமைச்சர் பாராட்டியுள்ளார்.

சஊதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று, ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்ட முகநூல் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக, கடந்த 2026 செப்டம்பர் 17 அன்று அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

இருப்பினும், ராஜதந்திர மற்றும் பிற தலையீடுகளைத் தொடர்ந்து, ஒக்டோபர் 14 அன்று அந்த நீதிமன்றம் மரண தண்டனையை ரத்துச் செய்தது.

அவர் – மீதமுள்ள சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய மேலதிக ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, நொவம்பர் 9 அன்று சஊதி அரேபிய பொது வழக்குத் தொடரும் அலுவலகம் (Public Prosecution), இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டாம் என்று தீர்மானித்தது. இது அவர் முழுமையாக விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.