
சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரி (PAYE tax) தொடர்பில் மேலதிக நிவாரணங்களை அடுத்ததாக வரவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, மாதாந்த வரி விலக்கு வருமான வரம்பை ஏற்கனவே 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஊழியர்கள் மீதான வரிச் சுமையைக் குறைக்கும் வகையில், வரவுள்ள வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மேலதிக நிவாரணங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உழைக்கும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, முன்னதாக சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரி (PAYE tax) கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் முதல் மாதாந்த வரி விலக்கு வருமான வரம்பு 150,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இருப்பினும், புதிதாக முன்மொழியப்படவுள்ள வரி விலக்கு வரம்பு எவ்வளவு என்பது குறித்தோ அல்லது வழங்கப்படவுள்ள மேலதிக வரி நிவாரணத்தின் அளவு குறித்தோ ஜனாதிபதி எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் வெளியிடவில்லை.
நொவம்பர் 12-ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிக வருமான வரிப் பிடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு, வருமான வரியில் மேலதிக நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஏற்கனவே பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.



