தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளரின் நியமனத்தை ரத்துச் செய்து, கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

– நூருல் ஹுதா உமர் –

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்தை, கல்முனை மேல் நீதிமன்றம் இன்று (05) வழங்கிய தீர்ப்பின் மூலம் ரத்து செய்துள்ளது.

குறித்த பதவிக்காக விண்ணப்பித்திருந்த கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவர், 2025ஆம் ஆண்டு – கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான விசாரணையின் நிறைவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், தற்போது மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்தவரின் நியமனத்தில் – பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக, நேர்முகப் பரீட்சையின்போது சமர்ப்பிக்கப்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்கள் முறையாகச் சரிபார்க்கப்படாத நிலையில், அவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு மாகாணப் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ புள்ளித் திட்டத்திற்கு மாற்றமான மற்றுமொரு புள்ளித் திட்டம், நேர்முகப் பரீட்சையின்போது பயன்படுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன், தற்போதைய மாகாணப் பணிப்பாளரின் நியமனத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், எதிர்காலத்தில் இடம்பெறும் நேர்முகப் பரீட்சைகளின்போது முறையாகச் சரிபார்க்கப்பட்ட பட்டச் சான்றிதழ்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சரிபார்க்கப்படாத சான்றிதழ்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கவோ, அவற்றைத் தகைமைகளாகக் கருதவோ கூடாது என்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும் நியமன அதிகாரியான கிழக்கு மாகாண ஆளுநருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பானது தனிப்பட்ட நியமன விவகாரத்தைத் தாண்டி, கிழக்கு மாகாண அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, தகைமை அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, முறையாகச் சரிபார்க்கப்படாத வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரச நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஏனையோரின் விவகாரங்களிலும் இந்தத் தீர்ப்பு கவனத்தை ஈர்க்கும் எனக் கருதப்படுகிறது. இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்ட விபரங்களைத் தெரிவித்தார்.