தலைப்புச் செய்திகள்

அமெரிக்க இடைத் தேர்தலில் ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவு: இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என கணிப்பு

அமெரிக்க இடைத்தேர்தல்களைத் தொடர்ந்து, காங்கிரஸின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சிஎன்என் தகவலின்படி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என்றும், இதன்மூலம் காங்கிரஸின் மீதான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள், டிரம்பின் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில், அவரது சட்டமியற்றும் செயல்திட்டங்களுக்கு சவால் விடுவதற்கும், அவரது நிர்வாகத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வழங்கும்.

இந்தத் தேர்தல் முடிவு, வாஷிங்டனின் அரசியல் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றக் குழுக்களின் கட்டுப்பாட்டையும், நிர்வாகத்தின் மீது விசாரணைகளைத் தொடங்கும் திறனையும் பெற்றுள்ளனர்.

செனட் மீதான கட்டுப்பாடு, கூட்டாட்சி நீதிபதிகள் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட – ஜனாதிபதியின் நியமனங்களை உறுதி செய்வதில் செல்வாக்கு செலுத்தவும் ஜனநாயகக் கட்சியினருக்கு வழிவகுக்கும்.

வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த வாக்காளர்களின் கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவுகள் வந்துள்ளன. இந்த பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது முக்கியமாக இடம்பெற்றன.

குடியரசுக் கட்சியின் பின்னடைவுகளுக்கு எதிர்வினையாற்றிய டிரம்ப், தான் ஒரு வேட்பாளராக இருந்திருந்தால் தனது கட்சி சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் என்று கூறினார்.

“நான் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை, ஒருவேளை இடம்பெற்றிருந்தால், நாங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்போம்” என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.

இந்த புதிய அதிகாரச் சமநிலை, ட்ரம்ப்பின் பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்தில் முக்கிய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குரிய, அவரது நிர்வாகத்தின் திறனை கணிசமாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.