தலைப்புச் செய்திகள்

கல்முனை வைத்தியசாலை ஆடைப் பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்டோருக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

– நூருல் ஹுதா உமர் –

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட 06 முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக, டொக்டர் குணசிங்கம் சுகுணன் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதவான் அ. தர்ஷினி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவர் மிப்ளால் மௌலவி, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், தொழிலதிபர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகிய பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சிபான் மஹ்ரூப், சாரிக் காரியப்பர், ஆரிகா காரியப்பர், எம்.வை. அன்வர் சியாத், துல்ஹர் நயீன் துல்சான், ஏ.எல்.எம். றிபாஸ், பீ.எம். றஸீன், எம்.ஏ. அன்சில், எம்.மனாப், எம். முஹம்மட் நப்ஸர் மற்றும் எம். முஹம்மட் முபீன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், இவ்வழக்கினை விசாரிப்பதற்கான மன்றின் நியாயாதிக்கம் தொடர்பிலான ஆட்சேபனைகளை முன்வைத்ததுடன் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல ஆட்சேபனைகளை முன்வைத்தனர். மேலும் இரு பிரதிவாதிகள் எழுத்துமூல ஆட்சேபனைகளை முன்வைக்கவும், வாதங்களை முன்வைக்கவும் குறித்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் பிரதிவாதி ஏ.எல்.எம். முக்தார் – தனது பேஸ்புக்-இல் வழக்காளி தொடர்பில் எழுதிய பதிவை நீக்கமியமை காரணமாக, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்காளி டொக்டர் சுகுணன் மன்றுக்கு இன்று சமூகமளித்திருக்கவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி ஆஜராகி வழக்காளி தொடர்பிலான வாதங்களை முன்வைத்தார்.