தலைப்புச் செய்திகள்

அடுத்த பட்ஜட்டில் சில வரிகள் குறைக்கப்படும்; பணவீக்கம் அதிகரித்துள்ளமை குடும்பங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது: ஜனாதிபதி தெரிவிப்பு

சில வரிகளை அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதே வேளையில் அரச வருவாய் இலக்குகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யப்போவதாகவும் – ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரச் செயல்பாடு குறித்துப் பேசிய ஜனாதிபதி, அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து புதிய வரிகள் எதையும் விதிக்காமலேயே தனது வருவாய் இலக்குகளை அடைந்துள்ளதாகக் கூறினார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய வரிகள் எதையும் விதிக்கவில்லை. மாறாக, ஏற்கனவே இருந்த சில வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளோம். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் இன்னும் சில வரிகளைக் குறைப்போம்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த வரிக்குறைப்புகள், அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

முந்தைய அரசாங்கங்கள் தாங்கள் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை அடைவதில் தொடர்ந்து தோல்வியடைந்தன என்றும், பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 90 சதவீதத்தை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

”இருப்பினும், தற்போதைய நிர்வாகம் – தனது வருவாய் எதிர்பார்ப்புகளைத் தாண்டிச் செயல்பட்டுள்ளதுடன், முதன்மை வரவு-செலவுத் திட்ட உபரியையும் (primary budget surplus) பராமரித்து வருகிறது. இது காலப்போக்கில் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க உதவும்” என்று அவர் கூறினார்.

அதேவேளையில், பணவீக்கம் அதிகரித்திருப்பது குடும்பங்களுக்கு, குறிப்பாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு மூலம் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த பணவீக்க அழுத்தத்திற்கு, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடைகளே முக்கிய காரணம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.