தலைப்புச் செய்திகள்

நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், வாகனம் வாங்கிக் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டு: பிரதம பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்

கோட்டவில பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய காவல் பிரதம பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்த வெள்ளிக்கிழமை (6) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கார் ஒன்றை வாங்குவதற்கும், அதற்கான குத்தகை (leasing) தவணைகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் வழிவகை குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, வருனி போகஹவத்த நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் – மேற்படி பிரதம பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்தனர்.

கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய போகஹவத்தவின் வசம் இருந்த சொகுசு காரை, ஒக்டோபர் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைப்பற்றினர்.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற 01 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியுடன் தொடர்புடையவர் எனக் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே, இந்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைகளைச் செலுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வருனி போகஹவத்தவின் மாதாந்தச் சம்பளம் 140,000 ரூபாயாக இருக்க, அவர் பயன்படுத்திய வாகனத்திற்கான மாதாந்தக் குத்தகைத் தவணை மட்டும் 132,000 ரூபாயாக இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாகனம் வாங்குவதற்கும், அதன் குத்தகைத் தவணைகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதி – எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.