தலைப்புச் செய்திகள்

189 கிலோகிராம் போதைப்பொருள், இலங்கையின் தென் ஆழ்கடலில் சிக்கியது

ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 189 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை, தென் ஆழ்கடலில் இடைமறிக்கப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகிலிருந்து, இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 4.2 பில்லியனுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 132 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் 57 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் ஆகியவை அடங்கும் என்று கடற்படை ஊடகப் பணிப்பாளர், தளபதி சமிந்த வலகுலுகே தெரிவித்துள்ளார்.

இன்று (05) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, அந்த மீன்பிடி இழுவைப் படகிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை ஆய்வு செய்து எடைபோட்டதைத் தொடர்ந்து இந்த இறுதிப் புள்ளிவிவரங்கள் உறுதி செய்யப்பட்டன.

‘பன புத்தா’ எனப் பதிவுசெய்யப்பட்ட இந்த இழுவைப் படகு, இலங்கையின் தென்கடலில் நொவம்பர் 01 ஆம் திகதி காலையில், உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட ஒரு விசேட கடற்படை நடவடிக்கையின்போது இடைமறிக்கப்பட்டது.

அந்தக் கப்பல் – மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஒக்டோபர் 18 அன்று கந்தாரா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருந்ததாக தளபதி வலகுலுகே குறிப்பிட்டார்.

அந்த இழுவைப் படகை வழிமறிப்பதற்காக கடற்படை தனது மேம்பட்ட கப்பலான சமுத்ர விஜயை அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய 10 மூட்டைகளைக் கண்டுபிடித்தனர். மேலும், கப்பலில் இருந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய பரிசோதனையில், சந்தேகத்திற்கிடமான ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 100 பொட்டலங்களும், சந்தேகத்திற்கிடமான ஹெரோயின் அடங்கிய 52 பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), அரச புலனாய்வு அமைப்புகள், சர்வதேச புலனாய்வு அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளின் புலனாய்வு ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தளபதி வலகுலுகே தெரிவித்தார்.