
வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பணம் – எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படுத்தத் தவறியமைக்காக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய – பிரதம பரிசோதகர் வருனி போகஹவத்த மற்றும் அவருடன் தொடர்புபட்ட மேலும் நான்கு சந்தேக நபர்களை, நொவம்பர் 20-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று ’(06) மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்போது, விசாரணைகளை நிறைவு செய்து, அது தொடர்பான முடிவுகளை நொவம்பர் 20-ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
ஒரு வாகனத்தை வாங்குவதற்கும், அதற்கான குத்தகை (lease) தவணைகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலங்கள் குறித்து வெளிப்படுத்தத் தவறியதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பிரதம பரிசோதகர் வருனி போகஹவத்தையைக் கைது செய்தனர்.
அவரது வசம் இருந்த சொகுசு வாகனம் ஒன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், குறித்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைகளைச் செலுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்பான செய்தி: நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், வாகனம் வாங்கிக் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டு: பிரதம பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்



