தலைப்புச் செய்திகள்

முறையற்ற ரீதியில் பயன்படுத்திய எரிபொருளுக்கான பணத்தை, முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் செலுத்தினார்

வட மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத், முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 11,320 லீட்டர் எரிபொருளுக்கான செலவுத் தொகையான 1.17 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளார்.

முன்னாள் ஆளுநர் 11,320 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியது சுற்றறிக்கை அறிவுறுத்தல்களுக்கு முரணானது என்று சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம், அந்த 1.17 மில்லியன் ரூபாயை மீளப் பெறுமாறு மாகாண சபைக்குப் பணித்திருந்தது.

இந்தத் தொகையை முன்னாள் ஆளுநர் ரொக்கமாகச் செலுத்திவிட்டதாக, வட மத்திய மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் அருண ரவி நேற்று (04) தெரிவித்தார்.

இந்த முறைகேட்டிற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது – ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிரதி பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.