தலைப்புச் செய்திகள்

கோட்டாவின் ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) விசாரணையின்றி தள்ளுபடி செய்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – தன்னைக் கைது செய்வதையும் தடுப்புக்காவலில் வைப்பதையும் தடுக்கும்படி கோட்டாபய ராஜபக்ஷ கோரியிருந்தார்.

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியது.

நீதிமன்றம் தனது ரிட் அதிகார வரம்பைப் பயன்படுத்த மறுத்ததுடன், எதிர்மனுதாரர்களுக்கு அறிவிப்புகள் அனுப்புவதற்கான கோரிக்கையையும் நிராகரித்து, விசாரணைக்குச் செல்லாமலேயே மனுவைத் தள்ளுபடி செய்தது.

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த உத்தரவுக்கு எதிராக ஒரு சிறப்பு மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார்.

அந்தக் கோரிக்கை மீதான சமர்ப்பிப்புகளுக்காக, இவ்வழக்கு ஒக்டோபர் 09ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.