தலைப்புச் செய்திகள்

08 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்திய நபர், விமான நிலையத்தில் அகப்பட்டார்

சுமார் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 03 கிலோ 994 கிராம் ‘கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (ஐஸ்) போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இலங்கை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், மேற்படி நபரை நேற்று இரவு (29) கைது செய்தனர்.

சந்தேக நபர் ரத்மலான, ஜய மாவத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் ஓமானிலிருந்து கத்தாரின் தோஹாவிற்கு அந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்து, பின்னர் நேற்று மாலை 7.30 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

குறித்த போதைப்பொருள் தொகுதி 10 பொதிகளாகப் பிரிக்கப்பட்டு, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்த பிஸ்கட் மற்றும் சொக்லேட் பக்கெட்டுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபரை அடையாளம் கண்டு சோதனையிட்ட பின்னரே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.