
– பாறுக் ஷிஹான் –
கதிர்காமம் யாத்திரிகர்களுடன் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு 100 ரூபா அபராதம் விதித்து – நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் பொலிஸார், குறித்த இளைஞனைக் கைது செய்தனர். அனையடுத்து 2026 ஜூன் 28ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போது, 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அந்த இளைஞர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு அண்மையில் (செப்டம்பர் 07) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் மன்றில் ஆஜரானார்.
இதன்போது, நாயைத் தாக்கிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சந்தேகநபருக்கு 100 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தும் நீதவான் தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையைச் செலுத்தியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.



