தலைப்புச் செய்திகள்

மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக சட்டத்தரணி றிபான் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி எச். றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எஸ். அப்துல் வாசித், அவரின் பதவியை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

றிபானுக்கான நியமனக் கடிதத்தை இன்று (21) கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்கி வைத்தார்.

இந்த நியமனம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் அறிவிக்கவுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை – ஏற்கனவே இருவருக்கு வழங்கப்பட்டது. அந்தவகையில் றிபான் மூன்றாவது நபராவார்.

நியமனம் வழங்கும் இந்த இந்நிகழ்வில் மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களான செயலாளரர் நிசாம் காரியப்பர், தவிசாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.