தலைப்புச் செய்திகள்

பிள்ளையானுக்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

ட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் இருவரை செப்டம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மூவரும் சிறையிலிருந்து வீடியோ வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கல்லடியில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் ஒரு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் உட்பட இருவர் கொல்லப்பட்டமை, வவுணதீவில் ஒரு தொழிலதிபர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட 2008-ஆம் ஆண்டில் நடந்த – பல சம்பவங்கள் தொடர்பாக இந்த வழக்கு நடந்துவருகிறது.

லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் ஒருவர் உட்பட – நான்கு சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், 2026 ஜூன் 17 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

பிள்ளையான் மற்றும் ராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல் வழங்குநர்கள் எனக் கூறப்படும் மற்ற இரண்டு நபர்களை, 2025 நொவம்பரில் – பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்தனர்.