தலைப்புச் செய்திகள்

நீர்கொழும்பு தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமைச் சிறை அதிகாரி – சமீபத்திய மோதல்கள் தொடர்பான நீதவான் விசாரணையில் வழங்கிய சாட்சியத்தை, பொதுவெளியில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என நீர்கொழும்பு நீதவான் செலானி பெரேரா உத்தரவிட்டார்.

அந்த சாட்சியத்தில் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய முக்கியத் தகவல்கள் அடங்கியிருப்பதால், அதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என அவர் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் (30) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​தலைமைச் சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார இரண்டு மணி நேரம் நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

மோதல்கள் வெடித்தபோது சிறைகளில் பணியில் இருந்த தலைமைச் சிறை அதிகாரி தாமே என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளின் தலைமையில், அவர் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை சாட்சியமளித்தார்.

தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் முக்கியத் தகவல்களைக் கொண்ட சிறை அதிகாரியின் சாட்சியப் பதிவேட்டை, நீதிமன்றத்தின் பாதுகாப்பில் நன்கு பத்திரமாகப் பராமரிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

நான்கு உதவி பொலிஸ் அத்தி அத்தியட்சகர்கள் அடங்கிய குழுவின் கீழ், இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மோதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்ட வழக்கு ஆதாரங்கள் குறித்த அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவிட்டார்.