தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் விதித்த நிபந்தனை

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரணித்தவரின் ஜனாஸாவை, நிந்தவூரிலுள்ள பொது மையவாடியொன்றின் – குறித்தொதுக்கப்பட்ட ஓர் இடத்தில் அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் கடுமையான நிபந்தனையுடன் நேற்று (07) அனுமதி வழங்கியுள்ளது.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் – மரணித்தவர்களின் உடல்களை, பொது மையவாடிகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதில்லை என்று, நிந்தவூரில் ஏற்கனவே தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்து.

இந்த நிலையில், மரணித்தவரின் குடும்பத்தினர் விடுத்த மன்றாட்டமான வேண்டுகோளுக்கு இணங்க, கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் ஊடகப்பிரிவு வழங்கியுள்ள அறிக்கை வருமாறு;

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு கைதாகி மரணமான அட்டப்பளத்தைச் சேர்ந்த ஒருவரின் ஜனாஸாவை அடக்கம் செய்வது தொடர்பாக, கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய விசேட உடன்படிக்கையொன்று எட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் கைதாகி மரணமடைந்திருந்த அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த ஏ.டபிள்யூ. வாஜீத் என்பவரின் ஜனாஸாவை அடக்கம் செய்வது குறித்து, இரு தரப்பினரிடையே அவசர பேச்சுவார்த்தையொன்று 07.07.2026 அன்று – இஷா தொழுகையினைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி எம்.ஐ. ஜௌபர் (பலாஹி) தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், பள்ளிவாசல் உதவித் தலைவரும் சட்டத்தரணியுமான ஏ.எம். நசீல், ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் உலமா சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்கால சமூக நலனைக் கருத்திற்கொண்டு இப்பேச்சுவார்த்தையின் போது பல அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உத்தியோகபூர்வ ஆவணமாக கையெழுத்திடப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

* இறுதி உறுதிமொழி: சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தரப்பினர், இனிவரும் காலங்களில் எந்தவொரு சூழ்நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடமாட்டோம் என ஊர் மக்களுக்கு உறுதியாகவும் இறுதியாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

* மார்க்க, சமூக சேவைகள் புறக்கணிப்பு: இனிவரும் காலங்களில் எவரேனும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஊர் பொதுப் பள்ளிவாசலினால் வழங்கப்படும் ஜனாஸா குளிப்பாட்டுதல், ஜனாஸா நல்லடக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு மார்க்க மற்றும் சமூக சேவைகளும் வழங்கப்படமாட்டாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

* அத்தியாவசிய சேவைகள் ரத்து: கிராமத்திலுள்ள பொது நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளினால் வழங்கப்படும் இதர அத்தியாவசிய சேவைகளும் அவர்களுக்கு முழுமையாக நிறுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிவாசல் அனுமதிகள் மறுப்பு: போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு பள்ளிவாசலினால் வழங்கப்படும் நற்சான்றுப் பத்திரம், திருமண மற்றும் மரண விடயங்களுக்கான ஜும்மா பள்ளிவாசல் அனுமதி என்பன முற்றாக மறுக்கப்படும்.

நிபந்தனையுடனான அனுமதி: உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவும், எதிர்கால சட்ட பிரமாணங்களுக்கு அமைவாகவும் ‘பிர்தௌஸ் மையவாடியில்’ குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ் உடன்படிக்கையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு குடும்பத்தினர் மற்றும் சாட்சிகள் என பலரும் தங்களது தேசிய அடையாள அட்டை விபரங்களுடன் கையொப்பம் மற்றும் கைரேகைகளை இட்டு ஆவணப்படுத்தியுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்கள் இன்றிலிருந்து உடனடியாக விட்டு விலக வேண்டும் என நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.