
ஈரான் மீது அமெரிக்கா நேற்று (07) இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களில் 80 இலக்குகள் குறி வைக்கப்பட்டதாக மத்திய கட்டளை பிரிவு கூறியுள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள், அத்துடன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் திறன்கள் ஆகியவற்றின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
“சர்வதேச வர்த்தக வழித்தடத்தின் வழியாகச் செல்லும் கப்பல்களை தொடர்ந்து தாக்குவதற்கான ஈரானின் திறனைக் குறைக்கும் நோக்கில், நீரிணைக்கு உள்ளேயும் அருகிலும் இருந்த 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் சிறிய படகுகளும் தாக்கப்பட்டன என்றும் அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது – ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த நிலையில் ஈரானிய துறைமுக நகரமான சிரிக், பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 17 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் எண்ணெய் விற்க வழங்கிய அனுமதியை, அமெரிக்கா ரத்து செய்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கத்தார் மற்றும் சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் உட்பட மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டன.
இதேவேளை, தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய பெரும்பாலான தாக்குதல்கள் – பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்துள்ளன என்று ஈரான்அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


