
வீட்டில் இருந்த சிறுமியொருவரை விலாசம் கேட்பது போல் அழைத்து, அவரின் வாயைப் பொத்தி வேன் ஒன்றில் கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் எனும் குற்றச்சாட்டில் கைதான – கல்முனை வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 25 வயது இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மறுநாள் வியாழக்கிழமை (04) கடத்தப்பட்ட சிறுமியின் தரப்பினரால் இது குறித்து பொலிஸ் நிலையில் முறையிட்டனர். குறித்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்யப்பட்டார்.
இதனையடுதது நேற்று வெள்ளிக்கிழமை (05) அன்று குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி (பாடசாலையை விட்டு இடைவிலகியவர்) தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார். அப்போது ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு – தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இருவரும் 02 மாதங்களாக IMO மற்றும் WHATAPPS ஊடாக தொடர்பில் இருந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை (03) இரவு 11.30 மணியளவில் வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றுடன் – தான் பணியாற்றிய ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு 56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ஊடாக அழைத்த அவ்விளைஞன் முகவரி ஒன்றினை காட்டுமாறு கூறியுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்து வீதிக்கு வந்த சிறுமியின் வாயைப் பொத்தி, சந்தேக நபரான இளைஞன் – வேனில் கடத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதலில் சந்தேக நபரான இளைஞன் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர் இரு சந்தேக நபர்களும் அந்தச் சிறுமியை அக்கரைப்பற்று பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பஸ்ஸில் பயணித்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று, தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் – உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 02 பிள்ளைகளின் தந்தையான 56 வயது மதிக்கததக்க சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திச் செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றார்.


