
போலி ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி வாகனப் பதிவு எண்களைத் தயாரிக்கும் மையம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது பணக்கட்டு, போலி அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் ஆவணங்களுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது.
பொரல்லயிலுள்ள என். எம். பெரேரா மாவத்தையில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில், சில காலமாக – இந்த மையம் ரகசியமாக இயங்கி வந்துள்ளது.
அந்த வீட்டிலிருந்து 600 போலி ரப்பர் முத்திரைகள், நிலப் பதிவாளர் அலுவலகப் பத்திரங்களின் நகல்கள் அடங்கிய 02 அசல் கோப்புகள், 04 போலி தேசிய அடையாள அட்டைகள், போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள், ஒரு தட்டச்சு இயந்திரம், குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், மற்றும் ரூ. 1.5 மில்லியன் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

முக்கிய அரசத் துறைகள், சமாதான நீதிபதிகள், நொத்தாரிசுகள், சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்களின் ரப்பர் முத்திரைகளும் – கைப்றப்பட்டவற்றில் அடங்கும்.
சோதனையின் போது அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்களும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகேகொட – தெல்கந்த பகுதியில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


