தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள் கடத்திய பிக்குகளை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் மே 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கமாறு உத்தரவிட்டது.

சந்தேக நபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபானி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள், தாய்லாந்திலிருந்து தங்கள் பயணப் பைகளில் ரூ. 110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, மொத்தம் 112 கிலோகிராம் ‘குஷ்’ கஞ்சா மற்றும் ‘ஹஷிஷ்’ ஆகியவற்றை மறைத்துக்கொண்டு வந்தபோது, ஏப்ரல் 25 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் பேரில், அந்த 22 பிக்குகளும் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் மே 02 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அமிதானந்த தேரர் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு பௌத்த பிக்குவே, இந்த சட்டவிரோத கடத்தல் முயற்சியை அரங்கேற்றியதாக தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட பிக்கு கம்பஹா பகுதியில் உள்ள ஒரு விகாரையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

அதே சந்தேக நபரின் வழிகாட்டுதலின் கீழ், இதற்கு முன்னரும் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கும் தகவல்களையும் பொலிஸார் தெரிந்து கொண்டனர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, கடத்தல் நடவடிக்கைக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டார்.