தலைப்புச் செய்திகள்

உகண்டா ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி 07வது தடவையாக பதவிக்கு வந்தார்

உகாண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசெவேனி, ஏழாவது முறையாகப் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் ஆபிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராக அவர் இடம்பிடித்துள்ளார்.

யோவேரி முசெவேனிக்கு 81 வயதாகிறது. அவர் ஜனவரியில் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பதவிக்கு வந்துள்ளார்.

அவரின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக தலைநகர் கம்பாலாவில் கவச வாகனங்கள் உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

70%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று யோவேரி முசெவேனி தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2031-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது முக்கிய போட்டியாளரும், பாப் நட்சத்திரமாக இருந்து அரசியல்வாதியாக மாறியவருமான போபி வைன், தேர்தலில் வாக்குச்சீட்டு முறைகேடு நடந்ததாகக் கூறி தேர்தல் முடிவை நிராகரித்தார். தேர்தல் அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.

முசெவெனி 1986-ல் ஒரு கிளர்ச்சித் தலைவராக முதன்முதலில் ஆட்சிக்கு வந்தார், ஆனால் அதன் பிறகு ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் சில ஆபிரிக்கத் தலைவர்களில் இவரும் ஒருவர்.

கம்பாலாவில் உள்ள கொலோலோ சுதந்திர மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அரசாங்கம் அந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

உகாண்டாவிலுள்ள மக்களில் பெரும்பான்மையானோர் வேறு எந்த ஜனாதிபதியையும் அறிந்ததில்லை.

முசெவெனி எப்போது ஓய்வு பெற உத்தேசித்துள்ளார் என்பதை இன்னும் குறிப்பிடவில்லை, ஆனால் இதுவே அவரது கடைசி பதவிக்காலமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவரது 51 வயதான மகனும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் முஹூசி கைனருகபா, அவருக்குப் பின்னர் ஆட்சிக்க வருபவராகப் பரவலாகக் கருதப்படுகிறார்.