
ஈரானுடனான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று 22ஆம் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு வாரா கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்ரூத் சோசியல் தளத்தில் இந்த விடயங்களை ட்ரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், போர் நிறுத்தத்தை நீடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் விவரித்துள்ளார்.

‘எதிர்பார்த்தபடியே ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது என்ற உண்மையின் அடிப்படையிலும், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை, அந்நாட்டின் மீதான நமது தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்’ எனவும் தனது பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘எனவே, நமது ராணுவம் முற்றுகையைத் தொடரவும், மற்ற எல்லா வகையிலும் தயாராகவும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஆகையால், அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஒரு வழியில் அல்லது வேறு வழியில் முடிவடையும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறுவதற்கு நேற்று ஏற்பாடாகியிருந்த பேச்சுவார்த்தையில் ஈரான் கலந்து கொள்ளவில்லை.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்தது.


