
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை விடயத்தில் ஆளும் அரசாங்கம் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ள போதிலும், நடைபெற்று வரும் விசாரணைகளை சில அரச அதிகாரிகள் சீர்குலைக்க முயற்சிப்பதாக – கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (21) நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அந்த அதிகாரிகளுடன் தொடர்புடைய அரசியல் சக்திகள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கக்கூடுமா என்று பேராயர் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு இல்லையென்றால், உண்மையை வெளிக்கொணர்வதில் ஏன் மீண்டும் மீண்டும் தடைகள் ஏற்படுகின்றன என்றும் அவர் வினவினார்.
இவ்விஷயத்தை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவே, பல அம்சங்களைத் தங்களால் ஆழமாக ஆய்வு செய்ய முடியவில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாகவும் கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்தார்.
‘‘அபு ஹிந்த்’’ என்று அறியப்படும் நபரை – அடையாளம் காண்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘ஸஹ்ரான்’ உடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இந்த நபரைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது மிகவும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

அபு ஹிந்தின் அடையாளம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆணைக்குழுவின் முன் சாட்சியங்களை வழங்கியிருந்ததையும் பேராயர் குறிப்பிட்டார்.
அரச புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் கைபேசி மற்றும் கணினியில் இருந்த அனைத்துத் தரவுகளும் அழிக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தாக்குதல்கள் குறித்த உண்மையை மறைப்பதற்கான – ஒரு திட்டமிட்ட முயற்சியை இது சுட்டிக்காட்டுகிறதா என்றும், அப்படியென்றால், ஏன் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் பேராயர் கேள்வி எழுப்பினார்.


