தலைப்புச் செய்திகள்

சுங்கத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ள பெருந்தொகை வருவாய்: காரணம் என்ன?

இலங்கை சுங்கத்துறை 765.7 பில்லியன் ரூபாய் வருவாயை – ஏப்ரல் 16ஆம் திகதி நிலவரப்படிபதிவு செய்துள்ளது. இது, இந்தக் காலகட்டத்திற்கான வருவாய் இலக்கை விடவும் 71.8 பில்லியன் ரூபாயளவு விஞ்சியுள்ளது என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுங்கத்துறை 2025ஆம் ஆண்டில் – இதுவரை இல்லாத அதிகபட்ச வருவாயான 2,557.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்தது. அதேசமயம் 2026ஆம் ஆண்டிற்கு 2,207.0 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடியானது இலங்கை வழியாக அனுப்பப்படும் மறு ஏற்றுமதி சரக்குகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது என்றும், அதன் விளைவாக, அதிக அளவிலான கொள்கலன்கள் அவற்றின் இறுதி இலக்குகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, உள்நாட்டிலேயே இறக்கப்படுகின்றன என்றும் சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

“முதலில் மத்திய கிழக்குக்கு நேரடியாக அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்த கொள்கலன்கள் இப்போது இறக்கப்பட்டு, அந்தந்த இலக்குகளுக்கு திருப்பி விடப்படுகின்றன” என்றும் அவர் விளக்கினார்.