
யுக்ரேன் நாட்டுப் பெண் ஒருவர் – நேற்று முன்தினம் (12) இரவு கல்கிசை பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கொள்ளைச் சம்பவத்தில் இந்தப் பெண் ஈடுபட்டதாகவும், அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர் யுக்ரேன் நாட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அருகில் இருந்தவர்கள் பதிவுசெய்த காணொளிக் காட்சிகளின்படி, போதையில் இருந்ததாக நம்பப்படும் அந்தப் பெண், ஆக்ரோஷமாக நடந்துகொண்டு, அப்பகுதியில் இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரைக் கட்டுப்படுத்த முயன்ற ஒரு பொலிஸ் உத்தியோத்தரையும் அந்தப் பெண் தாக்குவதையும் அந்த வீடியோ காட்டுகிறது.

அருகில் இருந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, சுமார் 30 நிமிடங்கள் வரை அவர் கட்டுக்கடங்காமல் இருந்தார்.
இறுதியில் பொலிஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். பின்னர் அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


