
மத்திய கிழக்கிலுள்ள ஒரு நாட்டின் ஆதரவுடன், ஒரு ஈரானிய தீவைக் கைப்பற்றுவதற்கு ஈரானின் எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் கூறுவதாக, ஈரானின் சபாநாயகர் கூறியுள்ளார் என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தகைய எந்தவொரு முயற்சிக்கும் – உதவும் பிராந்திய நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்று, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
“ஈரானியப் படைகள் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றன, அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்தப் பிராந்திய நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத தாக்குதல்களை நடத்துவோம்,” என்று காலிபாஃப் சமூக ஊடகங்களில் இரண்டு தனித்தனி குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஈரானியத் தலைமைக்கு எதிராக – அமெரிக்கா புதிய அச்சுறுத்தல்களை விடுத்துள்ள சூழலில், காலிபாஃபின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இதேவேளை, ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளதை ஈரான் மறுத்துள்ளது.
இது இவ்வாறிருக்க ஈரான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் புதன்கிழமை கூறினார்.

“தற்போதைய தருணத்தின் யதார்த்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளத் தவறினால், தாங்கள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம், இனியும் தோற்கடிக்கப்படுவோம் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினால், அவர்கள் இதற்கு முன் சந்தித்ததை விடக் கடுமையாகத் தாக்கப்படுவதை ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்வார்” என்று லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையத்தைக் கொண்டுள்ள கார்க் தீவை, அமெரிக்கப் படைகள் ஆக்கிரமிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
“ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுப்பவர் அல்ல, ஆனால் அவர் நரகத்தைக் கட்டவிழ்த்துவிடத் தயாராக இருக்கிறார்” என்று லீவிட் மேலும் கூறினார்.
ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் இரண்டு அமெரிக்க மரைன் படைப் பிரிவுகளுடன் கூடுதலாக, வளைகுடாப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வான்வழிப் படைகளை பென்டகன் அனுப்பும் வேளையில், ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான போரை அச்சுறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


