தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்திய வழக்கு, ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், நாடாமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வாதம் எதிர்வரும் ஜூலை 2 திகதி நடைபெறும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதியரசர் மாயாதுன்ன கொரியா மற்றும் நீதிபதி மகேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை அபிநவ நிவாஹல் பெரமுனவின் தலைவர் ஓசலா ஹேரத் தாக்கல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அரச வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வந்தபோதே, பொதுத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரச பணியிலிருந்து முதலில் விலகாமல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வது, நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய – மேலும் அவகாசம் கோரியதோடு, நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவரது தனிப்பட்ட கோப்புக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசு சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, தனிப்பட்ட கோப்பு தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இருப்பதாகவும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதல் பிரதிவாதி அந்த ஆவணங்களை பெறலாம் என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

முதல் பிரதிவாதி, காலந்தாழ்த்தும் தந்திரமாக மீண்டும் மீண்டும் அவகாசம் கோருவதாகவும், அந்தத் தாமதம் பிரதி வாதிக்குச் சாதகமாக அமைவதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆயினும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் சட்டத்தரணி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல் பிரதிவாதி தனது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியை நீதிமன்றம் வழங்கியதுடன், இந்த வழக்கை 2026 ஜூலை 2 அன்று வாதத்திற்காக நிர்ணயித்தது.

மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் சட்டத்தரணி என்.கே. அசோக்பரனும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதனுக்காக சட்டத்தரணி சேனானி தயரத்னவும் ஆஜரானார்கள். அரசு சார்பில் அரச சட்டத்தரணி பிரபாஷனி ஜெயசேகர ஆஜரானார்.