
இலங்கை கடற்படையினரால் ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ இலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று (04) அதிகாலை கப்பல் பேரிடர் ஏற்பட்டதாக அறிவித்ததால், இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
ஈரானிய கடற்படைக் கப்பல் கடலில் சிரமங்களை எதிர்கொண்டபோது, அதில் சுமார் 180 பேர் இருந்ததாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“எங்களுக்கு முதலில் காலை 05.08 மணியளவில் ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. ஈரானிய கடற்படைக் கப்பலுக்கு உதவ உடனடியாக இரண்டு கடற்படைக் கப்பல்களை அனுப்பினோம். அதன்பிறகு, உதவி தேவைப்படுபவர்களை மீட்க கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொண்டன. அவசர உதவி தேவைப்படும் 30 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

ஈரானிய கடற்படைக் கப்பல் – இலங்கைக் கடற்பரப்பில் இல்லை. ஆனால் காலி கடலுக்கு அருகில் இருந்தது என்று அமைச்சர் ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
“1979 ஆம் ஆண்டு சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மாநாட்டின் (SAR மாநாடு) கீழ், எந்தவொரு கப்பலும் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.


