
– பாறுக் ஷிஹான் –
வீதி நடுவில் வாழை மரத்தை நட்டு – வித்தியாசமானதொரு போராட்டத்தில் சில குடும்பங்கள் நேற்று (08) ஈடுபட்டன.
மண்ஏற்றி செல்லும் கனரக வாகனங்களினால் தமது வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதி திருத்தி தரப்பட வேண்டும் எனவும் கோரி, அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நேற்று (08) முன்னெடுத்திருந்தனர்.
அம்பாறை மாவட்டம் – கல்ஓயா ஆற்றிலிருந்து கனரக வாகனங்கள், மணல் கொண்டு செல்லும் இந்த வீதி – கடுமையாக சேதமடைந்துள்ளமையை சுட்டிக்காட்டி, கல்ஓயா ஆற்றுக்கு அருகிலுள்ள எட்டு குடும்பங்கள் – குறித்த வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வீதியை மறித்த அப்பகுதி மக்கள் – டயர்கள் வைத்து வாழை மரங்களை நட்டு இந்தப் போராட்டத்தை தொடங்கினர். இதன் காரணமாக அப்பகுதியினால் பயணம் செய்த, மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் – அப்பாதையால் செல்ல முடியவில்லை.
அத்துடன் மணல் மற்றும் செங்கற்களை கொண்டு செல்லும் மேற்படி கனரக வாகனங்களை செலுத்துபவர்கள், குறித்த வீதியினை சரிசெய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மழை பெய்யும் நாட்களில் சேறும் குழியுமாக மாறும் இந்த வீதி – மழை அற்ற நாட்களில் தூசியால் மூடப்பட்டிருக்கும் என மக்கள் தெரிவித்துள்ளதுடன், குறித்த வீதி திருத்தப்படும் வரை, திறக்கப்படாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளரும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சனத் சந்திரதிலகவும் சம்பவ இடத்திற்கு வந்து – கிராம மக்களுடன் கலந்துரையாடினர்.
மணல் அனுமதிப்பத்திரதாரர்கள் குறித்த வீதியினை திருத்தும் வரை அவ்வீதி திறக்கப்படாது என அவர் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தனர்.





